இன்று திருக்கார்த்திகை தீபம்..! இன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும் தெரியுமா..?
திருக்கார்த்திகை தீபத் திருநாளில் குறைந்தபட்சமாக 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50, 100 என எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
கோவில்கள் மற்றும் இல்லங்களில் தீபங்கள் ஏற்றப்படும் இல்லத்தில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பாக உள்ளது. கார்த்திகை தீப திருநாளில் சொக்கப்பனைக்கு நெருப்பு வைத்து சிவபெருமான் ஜோதி பிழம்பாக தோன்றிய நாளை தான் கார்த்திகை தீபத்திருநாள் என அனைவரும் கொண்டாடி வருகின்றோம்.
முதலில் வாசலில் கோலத்தின் நடுவில் விளக்கு ஏற்ற வேண்டும். வாசல், நிலைவாசலில் தீபம் ஏற்றிய பிறகு வெளியில் ஏற்றிய ஒரு தீபத்தை எடுத்து வந்து வீட்டிற்குள் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். அதற்கு பிறகு வீட்டின் சமையல் அறை, படுக்கை அறை, கழிவறை, கூடம் என அனைத்து இடங்களிலும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம்.
நல்லெண்ணெய், பஞ்ச கூட்டு எண்ணெய்களை பயன்படுத்தி விளக்கேற்றலாம். குறைந்த பட்சம் ஒரு விளக்காவது நெய் தீபம் ஏற்ற வேண்டும். வாசலில் ஏற்றப்பட்ட தீபம் 30 நிமிடங்கள் எரிந்தால் கூட போதுமானது. பிறகு எடுத்து விடலாம். வீட்டின் பிற இடங்களில் ஏற்றிய தீபத்தில் அடிக்கடி எண்ணெய் விடவோ, திரியை தூண்டி விடவோ வேண்டிய அவசியம் இல்லை. அந்த தீபங்கள் தானாக குளிரும் வரை அப்படியே விட்டு விடலாம்.
விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. வாழை இலை, ஆலம் இலை, அரச இலை போன்ற இலைகளை பயன்படுத்தியோ அல்லது முடிந்தவர்கள் சிறிய தட்டுக்களை வைத்தோ விளக்குகள் ஏற்றலாம்.


