இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்; பிரதமர் மோடி, அமித் ஷா புகழாரம்..!!

 
1

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஜெயலலிதாவை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம்பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நினைவுகூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு தமிழில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், “முன்னாள் தமிழக முதல்வரும் மக்கள் தலைவருமான ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினத்தில் அவருக்கு புகழஞ்சலிகள்.

ஏழைகளின் நலனுக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறுசீரமைத்து, அவரது ஆட்சியின் பலன்களை கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதை உறுதி செய்தார்.

பொது சேவையில் அவரது அர்ப்பணிப்பு அனைவருக்கும் எப்போதும் ஒரு உத்வேகத்தை தரும்” என்று குறிப்பிடுள்ளார்.