இன்று பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!

 
1 1

சூரிய பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலை 6 மணிக்கு சூரியன் உதயமாவதற்கு முன்பே பொங்கல் வைத்து வழிபடலாம். இது ‘சூரிய பொங்கல்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. சூரிய உதயத்திற்கு முன்பே, பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 4:30 மணி முதல் 6:00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்த காலத்தில் வைக்கலாம். இது மிகச் சிறந்த நேரமாகும்.

காலை 6:00 மணிக்கு மேல் பொங்கல் வைக்க விரும்புபவர்கள் காலை 7:45 முதல் 8:45 மணி வரை வைக்கலாம். இந்த நேரத்தில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 10:35 மணி முதல் பகல் 01:00 மணி வரை வைக்கலாம். நீண்ட நேரம் தேவைப்படுபவர்கள் அல்லது மெதுவாக தொடங்குபவர்கள் பகல் 10:30 மணிக்கு மேல் பொங்கல் வைக்கத் தொடங்கலாம். காலை 6:00 மணி முதல் 7:30 வரை எமகண்டம் இருப்பதால் இந்த நேரத்தில் பொங்கல் பானை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் ராகு காலம் இருக்கும் மதியம் 1:30 மணி முதல் 03:00 மணி வரை பொங்கல் வைக்க கூடாது. சூரிய பகவான் ஜனவரி 14, 2026 அன்று மதியம் 3:30 மணிக்கு மகர ராசியில் பிரவேசிக்கிறார். இருப்பினும் தமிழ் முறைப்படி சூரிய உதயத்திற்கு பிறகு வரும் ஜனவரி 15ஆம் தேதியே தை முதல் நாளாகவும் பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. சிலருக்கு பொங்கல் ஜனவரி 14 ஆ அல்லது ஜனவரி 15 ஆ என்ற குழப்பம் இருக்கலாம். ஆனால் சூரிய உதயத்திற்கு பின் வரும் நாளையே கணக்கில் கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் ஜனவரி 15 ஆம் தேதியே பொங்கல் நாள் கொண்டாடப்பட வேண்டும்.

ஜனவரி 16, 2026 வெள்ளிக்கிழமை மாட்டு பொங்கல் ஆகவும், ஜனவரி 17 2026 சனிக்கிழமை காணும் பொங்கல் ஆகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காலை சூரிய உதயத்தின் பொழுது 6:15 மணி முதல் 6:45 மணிக்குள் பொங்கல் பானையில் பால் பொங்குவது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. மாட்டுப் பொங்கல் தினத்தில் படையிலிடும் பழக்கம் இருப்பவர்கள் காலை 9:10 மணி முதல் 10:20 வரை படையல் போடலாம் அல்லது 12:00 மணி முதல் 1:30 மணி வரை போடலாம். மாலையில் படையல் போடும் பழக்கம் இருப்பவர்கள் ஆறு மணிக்கு மேல் படையல் போடலாம். மாலையில் இடும் படையலுக்கு நேர கணக்கு கிடையாது.