இன்று ராம நவமி : மன அமைதியும் வாழ்வில் வளமும் சேர்க்க இன்று இந்த ஸ்லோகத்தை துதிக்கவும்..!
ராமர் பிறந்த நாளை நாம் அனைவரும் ராம நவமி என்று கொண்டாடுகிறோம். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர். ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் 10 நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர்.
விஷ்ணுவின் அவதாரம் என்று சொல்லப்படும் ராமரின் பிறந்தநாளாக ராம நவமி கொண்டாடப்படுகிறது. புராணங்களின் படி, ராமர் பூமியில் உள்ள அயோத்தியில் தசரதர் மற்றும் ராணி கௌசல்யா ஆகியோரின் மகனாக பிறந்தார். அவர் திரேதா யுகத்தில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. ராமர் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் என்று நம்பப்படுகிறது. மேலும் அவரை வணங்குவது தீய சக்திகளை விரட்டி, தெய்வீக சக்தியை பூமிக்கு கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.
ராம நவமி விரதம் :
ராம நவமியின் போது விரதம் இருப்பவர்கள் மிகவும் கண்டிப்பான விரதத்தை கடைபிடிப்பார்கள். உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் உண்ணாவிரதம் இருப்பார்கள். சில பக்தர்கள் தண்ணீர் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வார்கள்.. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்பதால் ராம நவமி அயோத்தியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமியின் போது, பக்தர்கள் அயோத்திக்கு வந்து சரயு நதியில் நீராடி, ராமர் கோவிலுக்கு வந்து பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.
அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.
குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
மன அமைதியும், வாழ்வில் வளமும் சேர்க்க ராமர் ஸ்லோகத்தை துதிக்கவும்:
* ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ
* ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

