இன்று பங்குனி உத்திரம் : முருகனின் அருளை பெற உதவும் அற்புத வழிபாடு!!
பங்குனி உத்திரம் என்பது பல தெய்வீகத் திருமணங்கள் நடைபெற்ற மிக முக்கியமான நாளாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற, மிகவும் சிறப்புக்குரிய தினமாக இது போற்றப்படுகிறது.
பங்குனி உத்திரம் விரதம் வேண்டுதலை உடனடியாக நிறைவேற்றி வைக்கும் அற்புதமான விரதமாகும். குறிப்பாக திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், முருகன் அருள் உள்ளிட்ட அனைத்தையும் பெற்றத் தரும் அற்புதமான விரதமாகும்.
பங்குனி உத்திரம், முருகப் பெருமானுக்குரிய விரத நாளாக குறிப்பிட்டு சொல்லுவதற்கு மிக முக்கியமான காரணம் உள்ளது. 27 நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமாக வருவது உத்திரம் நட்சத்திரம். தமிழ் ஆண்டில் 12வது மாதமாக வரும் பங்குனி மாதத்தில், 12வது நட்சத்திரமான உத்திரம் சேர்ந்து வருவதால் 12 திருக்கரங்களால் பக்தர்களை காக்கும் முருகப் பெருமானுக்குரிய தெய்வீக நாளாக இது கருதப்படுகிறது. சூரபத்மனுடன் போரிட்டு வென்ற பிறகு, முருகனிடம் இல்லாத ஒன்றை அவருக்கு பரிசாக தர விரும்பினான் இந்திரன். ஆனால் முருகனிடம் எல்லாமல் இருந்ததும். தாரம் மட்டுமே இல்லை. அதனால் தன்னுடைய மகள் தெய்வானையை முருகனுக்கு தாரமாக்கி, முருகனை குறையில்லாத தெய்வமாக மாற்றினான். முருகப் பெருமான், தெய்வாணையை திருமணம் செய்து கொண்ட தினமே பங்குனி உத்திர தினமாகும்.
பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் காலையிலேயே விரதத்தை துவக்கி விட வேண்டும். மாலை 7 மணிக்கு பிறகு முருகப் பெருமானை வழிபட்ட பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பங்குனி உத்திரத்திற்கு முருகனுக்கு பால்குடம் எடுக்கும் வழக்கம் உள்ளவர்கள் காலையில் உணவு சாப்பிடாமல் இருந்து, பால்குடம் எடுத்து முடித்த பிறகு சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்களும், திருமணத்திற்காக பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்களும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கு நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளலாம். முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுப்பது சிறப்பு. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கூட முருகன் சிலை, வேல் இருந்தால் பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
இந்த விரதத்தை அனுஷ்டித்தால் குடும்ப ஒற்றுமை ஏற்படும், தடைப்பட்ட சுப நிகழ்வுகள் நடைபெறும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இந்த நாளில் வீடு கட்டுதல், திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு போன்ற வேண்டுதல்களுக்காக பக்தர்கள் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்வதும் வழக்கமாக உள்ளது.அதன்படி, ஒரு வெள்ளைத் தாளில் தங்களின் வேண்டுதலை எழுதிக் கொண்டு, அதனுடன் ரூ.11 காணிக்கையை சேர்த்து மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி அருகிலுள்ள முருகன் கோயில் உண்டியலில் செலுத்தி பிரார்த்தனை செய்வது பரவலாக பின்பற்றப்படும் வழிமுறையாகும். வேண்டுதல் நிறைவேறிய பின்னர், அடுத்த ஆண்டு பங்குனி உத்திர நாளில் அன்னதானம் செய்வதோ அல்லது விரதம் இருந்து நேர்த்திக்கடனை செலுத்துவதோ பக்தர்களின் மரபாக உள்ளது.

