125வது மலர்கண்காட்சி தொடக்கம் : நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..

 
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..
 

 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலும்  மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள்  வந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் நீலகிரியில்  நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்ளது. இங்கு  ஆண்டுதோறும் மே மாதம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  

மலர்க்கண்காட்சி

அந்தவகையில் இந்த ஆண்டு 125வது மலர்கண்காட்சி இன்று தொடங்குகிறது.  இன்று தொடங்கி 23ம் தேதி வரை 5 நாட்களுக்கு மலர்கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாகவே இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், புல் மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று  தொடங்கும்  உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூன் 3ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த ஆண்டு கோடை சீசனின் போது (  ஏப்ரல், மே மாதங்களில்) தாவரவியல் பூங்காவிற்கு 7.5 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதைத்தொடர்ந்து   2-வது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை நாட்களிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் உதகைக்கு படையெடுத்தனர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.