இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கி., ஜெர்மனி பயணம்..!
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாளைய (இன்று) தினம் நான் ஜெர்மனி - இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார கால பயணமாக மேற்கொள்ள இருக்கிறேன். நம்முடைய திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்திருக்கிறோம்.
இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்களின்போது, முதலீட்டாளர்களும் தொழில்நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
இப்போது இந்தப் பயணத்தில் என்ன திட்டமிட்டிருக்கிறோம் என்றால், அதைப்பற்றி நாளைய (இன்று) தினம் நான் விமானத்தில் ஏறி புறப்படுவதற்கு முன்பு நிச்சயமாக பத்திரிகையாளர்களை சந்தித்து அந்த விவரங்களையெல்லாம் சொல்லப்போகிறேன். ஆனால் அதற்கு முன்பு நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில், ஒரு முக்கியமான நிகழ்வை அறிவிக்க விரும்புகிறேன்.
நம்முடைய தமிழ்ச்சமூகம் சுயமரியாதையுடன் தலைநிமிர்ந்து நடைபோடுவதற்கு காரணம், தந்தை பெரியார். தந்தை பெரியாரின் சிந்தனையை உலகு தொழும் காட்சியை நாம் இந்தப் பயணத்தில் பார்க்கப்போகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


