பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை - அரசுக்கு தினகரன் வைத்த முக்கிய கோரிக்கை!!

 
ttv

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையும், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, நெல்லை, திண்டுக்கல், நீலகிரி என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வரும் 20 ஆம் தேதி வரை கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையையும், சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ttv dhinakaran

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை வழக்கம்போல அலட்சியமாக எதிர்கொள்ளாமல், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதோடு, கனமழை தொடரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள், மீட்பு மற்றும் நிவாரண முகாம்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். 

மேலும், வானிலை ஆய்வு மையத்துடன் முறையான தொடர்பில் இருந்து, அவர்கள் விடுக்கும் எச்சரிக்கையை சரிவர கண்காணித்து அடுத்து வரும் சில தினங்களில் பெய்யக்கூடிய மழையின் அளவை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு, மழைக்காலங்களில் பரவக்கூடிய நோய்த்தொற்றுகளில் இருந்தும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.