வெறும் தட்டச்சு பிழையால் கொலை குற்றவாளியை விடுவிப்பதா? - உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் ஆவேச வாதம்!

 
1

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும் சோனம் ரகுவன்ஷிக்கும் கடந்த ஆண்டு மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு தேனிலவுக்காக மே 20 அன்று மேகாலயாவின் சோஹ்ரா (சிரபுஞ்சி) பகுதிக்கு புதுமண தம்பதிகள் சென்றனர்.

அங்கு மே 23 முதல் புதுமண தம்பதி திடீரென மாயமான நிலையில், ஜூன் 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் சிதைந்த உடல் ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், சோனம் தனது காதலன் ராஜ் சிங் குஷ்வாஹா மற்றும் கூலிப் படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்தது அம்பலமானது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சோனம், சுமார் 10 மாதங்கள் ஷில்லாங் மாவட்ட மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27 அன்று ஷில்லாங் மாவட்ட நீதிமன்றம் சோனத்திற்கு ஜாமீன் வழங்கியது.

இதற்கு முக்கியக் காரணம், போலீசார் கைது ஆவணங்களை தயாரிக்கும் போது செய்த குளறுபடிகளே ஆகும். கொலைக்கான சட்டப் பிரிவான 103 (1)-க்கு பதிலாக, இல்லாத ஒரு பிரிவான 403 (1) என்று தட்டச்சில் பிழையாகக் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், ராணுவத்திலிருந்து ஓடிப் போனவர் என்ற தேவையில்லாத வார்த்தைகளும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றிருந்தது. கைதுக்கான முறையான காரணங்கள் குற்றவாளிக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற சட்ட விதி 22 (1) அடிப்படையில் கீழ் நீதிமன்றம் வழங்கிய இந்த ஜாமீனை, கடந்த ஜூன் 29 அன்று மேகாலயா உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேகாலயா அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்தார். அப்போது அவர், "இது முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கொலை. வெறும் தட்டச்சுப் பிழையை காரணம் காட்டி ஒரு கொலைக் குற்றவாளியை வெளியே விடுவது முறையல்ல" என்று வாதிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, மேகாலய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தங்களுக்கு சில மாற்றுக் கருத்துகள் இருந்த போதிலும், குற்றவாளி ஏற்கனவே சிறையிலிருந்து வெளியே வந்து விட்டதால், தற்போது அவரது ஜாமீனுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என கூறினர்.

இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு சோனம் ரகுவன்ஷிக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.