டிஎன்பிஎஸ்சி குளறுபடி- 5 அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம்
டிஎன்பிஎஸ்சி குளறுபடி விவகாரத்தில் இரண்டு உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 08.02.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தொகுதி-II மற்றும் தொகுதி-IIA-இல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வுகள் தொழில்நுட்பக் காரணங்களால் இரத்து செய்யப்பட்டன. இத்தேர்வுகள் எதிர்வரும் 15.03.2026 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மறுதேர்வுக்கான விவரங்கள் குறித்து தேர்வாணையம் ஏற்கெனவே பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.
08.02.2026 அன்றைய தேர்வுகள் இரத்து செய்யப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இரண்டு உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் நிரலர்கள், இரண்டு பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார் செயலாளர் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துணைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாவண்ணம் கூடுதலான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

