TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.. பார்ப்பது எப்படி..?

 
1 1

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. விஏஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 3,935 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 11,48,019 பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

2,41,719 பேர் குரூப் 4 தேர்வு எழுதவில்லை. அந்த வகையில், ஒரு இடத்திற்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மொத்தம் 4,662 பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் குரூப் 4 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. 3 மாதத்துக்குள் முடிவு வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்தநிலையில், சொன்னதுபடியே ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளதால் தேர்வர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு முடிவை தேர்வர்கள் இந்த இரண்டு லிங்குகளில் சென்று பார்க்கலாம். https://tnpsc.gov.in and https://apply.tnpscexams.in/result-groupIV/A5k3pfLQfrCvGl3shUzfbvYWyto7qiY2 விண்ணப்பதாரரின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பார்த்துக்கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV பணிகள்) (அறிவிக்கை எண்.07/2025 மற்றும் பிற்சேர்க்கை எண்கள். 7A & 7B/2025) தேர்வு முடிவுகள் வெளியீடு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள் க்கான நேரடி நியமனத்திற்காக 25,04.2025 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான எழுத்துத் தேர்வு 12.07.2025 முற்பகல் 38 மாவட்ட மையங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 13,89,738 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகள் 2025 அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தேர்வாணைய வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ்வாறே, தேர்வாணையம் இன்று (22.10.2025) மேற்படி தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது தரவரிசை மற்றும் மதிப்பெண்களை தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இல் தேர்வரின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அவர்களின் ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் உரிமைக்கோரல்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்படமாட்டாது. இந்த முறை தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறிய நிலையில், கட் ஆஃப் கடந்த முறையை குறைவாகே இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.