விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வது வன்மையாக கண்டிக்கதக்கது - நாராயணன் திருப்பதி

 
narayanan stalin

போராட்டம் நடத்திய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தற்கு எதிராக போராடி கொண்டிருக்கிற அப்பாவி விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முனைந்துள்ள தி மு க அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ள போராடுவதற்கு உரிமையுள்ள விவசாயிகளை ஃபாஸிச தி மு க அரசு அச்சுறுத்தி பார்ப்பது ஜனநாயக விரோத செயலாகும். எதிர்க்கட்சியாக இருந்த போது பல்வேறு விவகாரங்களில் விவசாயிகளின் தோழன் போல் வேடமிட்டு அரசுக்கு எதிராக கலகம் விளைவித்த தி மு க, ஆளும் கட்சியான பிறகு அடக்குமுறையை அவிழ்த்து விடுவது கொடுஞ்செயல். 


மேற்கு வங்காளத்தில்சு நந்திகிராம் மற்றும் சிங்கூரில் இது போன்ற அடக்குமுறைகளை கையாண்டதன் விளைவாக தான் கம்யூனிஸ்டு அரசும், கட்சியும் வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றப்பட்டது என்ற வரலாற்றை தி மு க வும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மறந்து விடக்கூடாது. போராடிக்கொண்டிருக்கிற விவசாயிகளிடம் மனம் விட்டு பேசி அவர்களின் குறைகளை களைய முயற்சிப்பதே சரியானது. அதை விடுத்து, ஹிட்லரை போல், ரஷ்யாவின் ஸ்டாலினைப் போல் அடக்குமுறையை கையாள்வது 'விநாசகாலே விபரீத புத்தி' என்ற நிலையை உருவாக்கும்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உடன் அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும். பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.