ஆளுநருக்கு பேரவையில் கருத்து சொல்ல அனுமதி இல்லை- சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுவது தான் மரபு, அதை யாருக்காகவும் மாற்றமுடியாது என சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “சட்டப்பேரவை வரும் 11 ஆம் தேதி வரை நடத்தப்படும் 7 ஆம் தேதி மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஸ் இளங்கோவன் மறைவுக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு மற்றும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்படும், 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதமும், 11 ஆம் தேதி முதலமைச்சர் பதிலுரை நிகழ்த்துவார்.
ஆளுநர் தான் அண்ணா பல்கலைகழக வேந்தர் . அவர் பேசும் போது தான் அதிமுகவினர் பதாகைகளை காட்டினார்கள். அவர்கள் ஆளுநருக்கு எதிராக காட்டினார்களா என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவர நோக்கத்துடன் செயல்பட்டதால் அதிமுகவினரை வெளியேற்றப்பட்டார்கள். பேரவையில் ஆளுநர் ரவி அவரின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறிவிட்டார். சட்டப்பேரவை மரபுபடி தான் நடைபெறுகிறது. இதுவரை எந்த ஆளுநரும் இந்த பிரச்சனையை எழுப்பியது இல்லை. ஆளுநர் உரை நிகழும் அந்த நாள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. அவையில் கருத்து சொல்ல மக்களால் தேர்வு செய்யப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் தான் அவையில் கருத்து சொல்ல முடியும். ஆளுநருக்கு பேரவையில் கருத்து சொல்ல அனுமதி இல்லை.
ஆளுநர் உரையை வாசிக்க விருப்பம் இல்லாத காரணத்தால் தேசிய கீதத்தை ஒரு சக்காக வைத்து புறப்பணித்துள்ளார். சம்பிரதாயம் படி ஆளுநர் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்க வேண்டும். அதற்காக அழைப்பு விடுக்க சென்ற போது எவ்வித கருத்து முரண்பாடுகள் இல்லாமல் நல்ல முறையில் உபசரித்தார். அப்படி இருந்தும் மரபு மீறி ஆளுநர் செயல்படுவது நியாயமா ? சட்டமன்றத்துக்கு என மரபு உள்ளது. ஆளுநர் வரும் போது அவை இவ்வாறு தான் நடைபெற வேண்டும் என எங்காவது விதிமுறை உள்ளதா? சட்டமன்ற மரபை மாற்ற முடியாது. அடுத்த ஆண்டும் இப்படி தான் நடக்கும். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தாலும் அவை இப்படி தான் நடக்கும். தமிழ்நாடு சட்டமன்றம் இப்படி தான் நடக்கும். உரையை வாசிப்பதும் வாசிக்காததும் அவர் விருப்பம்” என தெரிவித்தார்.