ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் - முத்தரசன்

 
mutharasan rn ravi

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு இனியும் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறி ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார். 

protest

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது: 44 பேர்களின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தமிழக கவர்னரை திருப்பி அனுப்பும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தூதுவராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனை தடுக்க வேண்டிய ஆளுநர், சூதாட்ட நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலையை தூண்டும் விதமாக செயல்படுகிறார். உடனடியாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லை என்றால் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புகொடி காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.