தமிழகத்தில் சாராய ஆறு ஓடுகிறது - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

 
eps

ஆளுங்கட்சியினர் மற்றும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் தான் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இதுவரை 14  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அத்துடன் நேற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த அவர் ,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார். 

இந்த நிலையில், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரிடம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் நலம் விசாரித்துள்ளார்.  14 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் எடப்பாடி பழனிசாமி நலம், விசாரித்ததுடன் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதலும் கூறினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: அரசின் மெத்தனத்தால் இன்று பல உயிர்களை இழந்துள்ளோம். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டதற்கு  யார் பொறுப்பேற்பது? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் உள்ளிட்டோர் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலி மதுபானம், கள்ளச்சாராயம் குறித்து போலீசாருக்கு ஏற்கனவே தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தாள் தேனாறும், பாலாறும் ஓடும் என திமுக கூறியது. ஆனால் இப்போது சாராய ஆறு தான் ஓடுகிறது.