உழைப்பாளர் தினம் : தலைவர்கள் மே.தின வாழ்த்து..

 
Labor Day - உழைப்பாளர் தினம்

மே 1 ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  தமிழக அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் பலரும் மே. தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.  தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :  “உலக உழைப்பாளர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின  வாழ்த்துகள்!..  ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். தொழிலாளர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு, அவர்களை வாழவைக்கும் அரசாகவும் கழக அரசு என்றுமே விளங்கும்!”

ஸ்டாலின்

கமல்ஹாசன் : “சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பாகக் கொழுந்துவிட்ட சர்வதேசத் தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்குப் பாதுகாப்பாய் நிற்கிறது. தொழிலாளர் இயக்கச் செயல்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்.”

பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை : “உழைப்பே உயர்வு! உலகை தன் உழைப்பால் உயர்த்தி வரும் உழைப்பாளி  பெருமக்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்! மே தின வாழ்த்துகள்”

அண்ணாமலை

கே.எஸ்.அழகிரி :  “தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும்.  உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினர் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”

ஜி.கே.வாசன் :  “நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும்,மக்களின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுப்படும் ஒவ்வொரு தொழிலாளர்களின் குடும்பங்களின் வாழ்வு செழிக்க,உயர  மே தின வாழ்த்துக்களை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகிறேன்.”

Labor Day

கவிஞர் வைரமுத்து :  “உலக உருண்டையின்
ஒரே மதம் உழைப்பு

பிறந்த மேனியாய்
இருந்த பூமிக்குப்
பச்சை ஆடை கட்டிவிட்டது
உழைப்பு

அடுத்த நூற்றாண்டை
மானுட உச்சமாய்
உருவாக்கப் போவதும்
உழைப்பு

அந்த
உழைப்பாளிகளுக்கு
மேதினி எங்கும்
மே தின வாழ்த்துக்கள்”