சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!!

 
kamal

மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில், அரசு சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைப்பதில்லை.  பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுப்பதில்லை;  எவ்வளவுமுறை மனு கொடுத்தாலும் சரியான பதில் இல்லை; இன்னும் சொல்லப்போனால் மனுக்களை உடனடியாக முடிக்கச் சொல்லி மேலிடம் அழுத்தம் தருவதால், புகார் மீது தற்காலிக நடவடிக்கை எடுப்பது அல்லது நடவடிக்கை எடுப்பது போல காட்டிக்கொள்வது  காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசின் சேவைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் பெறுவதற்கு சேவை பெறும் உரிமைச் சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

kamal

சேவை பெறும் உரிமைச் சட்டத்தின்படி, அரசு மக்களுக்கு அளிக்கும் சேவைகளுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேவை கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கவும், இந்த அபராதத் தொகையானது சேவைத் தாமதத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்படவும், குறித்த காலத்திற்குள் சேவையளிக்கத் தவறிய  அலுவலர்கள் தண்டிக்கப்படுவதற்கும் கூட வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் கீழ்க்கண்ட சேவைகள் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளும் விண்ணப்பிக்கப்பட்ட நாளிலிருந்து குறிப்பிடப்பட்ட நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

kamal

1. குடும்ப அட்டை - 30 நாட்கள்.
2. வாரிசு சான்றிதழ் - 15 நாட்கள்.
3. நிலப்பட்டா - ( முழு பட்டா - 15 மற்றும் உட்பிரிவு பட்டா - 30)
4. இறப்புச் சான்றிதழ் - 7 நாட்கள்
5. வருமான சான்றிதழ் - 15 நாட்கள்.
6. சாதிச் சான்றிதழ் - 7 நாட்கள்.
7. மின் இணைப்பு - 14 நாட்கள்.
8. குடிநீர் இணைப்பு - 7 நாட்கள்.

இதனால் அரசின் சேவைகள் எப்போது கிடைக்கும் என்று நாள் கணக்காக, மாதக்கணக்காக மக்கள் காத்திருப்பது தடுக்கப்படும். ஹரியானா, பீகார், புதுடெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்பட 20 மாநிலங்களில் சேவை பெறும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம்  மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில், இதற்கென தனித்துறைகள் உருவாக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைகிறதா என்று கண்காணிக்கப்படுகிறது.

KamalHaasan

கடந்த 2019 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் சேவை உரிமைச் சட்டம் (Right to Services Act) நிறைவேற்றப்படும்  எனக் குறிப்பிட்டிருந்தது.  கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அது செயல்படுத்தப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தைத் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கு உரிய சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும். 2022-ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றத் தொடரின் இறுதி நாளான இன்றே அதைச் செய்தால் மிகுந்த பாராட்டுக்குரிய செயலாக அது இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.