44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92.கோடி நிதி - தமிழக அரசு அரசாணை..

 
தமிழக அரசு

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது  செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ரூ.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.   இந்த போட்டிக்காக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.  180 நாடுகளை சேர்ந்த சுமார் 2000  வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.  

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி - 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

அண்மையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. முதன்முறையாக இந்தியா, ஓபன் பிரிவு மற்றும்  பெண்கள் பிரிவில் தலா 2 அணிகளை களமிறக்குகிறது.  இந்திய அணிக்கு கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்றும், கிராண்ட் மாஸ்டர் பிரவீன் திப்சே அணியை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ரூ.92.கோடி நிதி - தமிழக அரசு அரசாணை..
 
இந்த நிலையில், தற்போது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள   செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.    92.13 கோடி ரூபாயை ஏற்கனவே  ஒதுக்கியிருந்த  நிலையில், போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கூடுதலாக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய செஸ் கூட்டமைப்பு  செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கூடுதலாக ரூ.15 கோடி தர அரசிடம் கோரிக்கை  வைத்திருப்பதும்  குறிப்பிடத்தக்கது.