முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு...

 
Rep image

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  அரசு வழங்கியுள்ள காப்பீட்டு திட்டமே ’முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்’.  2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ’உயர் ரக மருத்துவ சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ்,  51 வகையான நோய்களுக்கு,  ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சைகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக பெறலாம்.  கடந்த(2020)  ஆண்டு ஜூன் மாதம் முதல் கொரோனா சிகிச்சையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணங்களும் வெளியிடப்பட்டன.


இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தவணைத் தொகையை,  ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட தொகையை தமிழக அரசே தனியார் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கிவந்தது. 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த திட்டம் மேம்படுத்தப்பட்டு ’முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசின் ’பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ’ திட்டத்துடன் இணைக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தவணை தொகையை பங்கிட்டு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் காப்பீட்டுத் திட்டம் வரும்  ஜனவரி மாதம் 11 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டிற்கான தவணைத் தொகையாக இந்த ஆண்டிற்கு மட்டும்  ரூ.1,248.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, மக்கள் நல்வாழ்வு, வருவாய் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.