“தமிழ் மொழி பழமையானது, சக்திவாய்ந்தது, அழகானது”- ஆளுநர் ரவி

 
அ அ

தமிழ் மொழி பழமையானது, சக்திவாய்ந்தது, அழகானது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.


உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள காசிக்கும் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கும் இடையே உள்ள கலாச்சார பண்பாடு ஆன்மீக வரலாற்று தொடர்புகளை புனரமைக்கும் விதமாக காசி தமிழ் சங்கமம் பெயரில் விழா உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியில் டிசம்பர் 2 முதல் 15 வரை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கல்வியாளர்கள் இளைஞர்கள் எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்புரை ஆற்றினார். விழா நினைவாக சிறப்பு நூல்களை குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி நன்றி உரை நிகழ்த்தினார்

காசி தமிழ் சங்கமும் 4.0 நிறைவு விழா நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ரவி, “காசிக்கும் ராமேஸ்வரத்திற்குமான தொடர்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தமிழ்மொழி பழமையான மொழி, சக்திவாய்ந்த மொழி, மிக அழகான மொழி. தமிழ் கலாச்சார பெருமைக்கு பிரதமர் மோடி செய்தது போல வேறு யாரும் செய்தது இல்லை. காசி தமிழ் சங்கமம் நிகழ்வால் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். முத்ரா திட்டம் மூலம் 52 லட்சம் பேரின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.