முன்னாள் ஆளுநர் ரோசய்யா மறைவு : டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்...

 
Rosaiah

முன்னாள் தமிழக ஆளுநர்  ரோசய்யாவின் மறைவிற்கு, அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தமிழக  ஆளுநரும், முன்னாள் ஆந்திர மாநில முதல்வருமான ரோசய்யா(88)  உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட இவர்,  வயதுமுதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவினால் ஹைதராபாத்தில் இன்று காலமானார். 

governor Rosaiya.

இவர் 2009 முதல் 2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்வராகவும், 2010 முதல் 2016 வரை தமிழகத்தின்  ஆளுநராகவும் பதவி வகித்திருக்கிறார். இந்நிலையில் மறைந்த ரோசய்யா அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ”தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் திரு.கே.ரோசய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.பி., அமைச்சர், முதலமைச்சர், ஆளுநர் என பல்வேறு பதவிகளை வகித்து நீண்ட கால பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தவர் திரு.ரோசய்யா அவர்கள். அன்னாரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.”என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், “ தமிழக முன்னாள் ஆளுனர் ரோசய்யா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். சட்டமன்ற, மேலவை உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என அரசு நிர்வாகத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலும், அனுதாபங்களும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்..