தமிழ்நாட்டில் புதிதாக 40 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பு 37 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 9 பேருக்கும், சென்னை மற்றும் சேலத்தில் தலா 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூரில் 3 பேருக்கும் நாமக்கல்லில் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருநெல்வேலி, திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 28 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
கொரோனா அச்சத்தால் பிளஸ் 1 பொதுத்தேர்வில் இன்று நடந்த தமிழ் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை, தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை 50,674 மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதனிடையே இந்தியா முழுவதுமாக கொரோனா தொற்றின் பாதிப்பு கூடிக்கொண்டே வரும் நிலையில், மக்கள் உஷாராக இருந்து, தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆங்காங்கே காய்ச்சல் முகாம்களும் நடைபெற்றுவருகின்றன.