தமிழக பாஜக-வின் அடுத்த தலைவர் யார்? - வருகிற 17ம் தேதி தேர்வு
தமிழக பாஜக-வின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க திமுவும், திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கி மீண்டும் அரியணையில் ஏற அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயும் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். பாஜகவும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறது. இதற்காக பாஜக கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய திட்டம் தீட்டி வருகிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக-வின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் வருகிற 17ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்ய வரும் 17ஆம் தேதி பாஜக மேலிடப் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். பாஜக மாநில தலைவர் பெயர்ப் பட்டியலில் தற்போதைய தலைவர் அண்ணாமலை, வானதி மற்றும் நயினார் நாகேந்திரன் பெயர்கள் முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.