அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி

 
Annamalai

தமிழக பாஜக குழுவினர் நாளை மறுதினம் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் கோவை ஈச்சானேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பார்வையாளர் சிடி ரவி, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர். காந்தி, நயினார் நாகேந்திரன் மற்றும் எச்.ராஜா, வேலூர் இப்ராகீம், நடிகை நமீதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதனிடையே செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரு பக்கம் டாஸ்மாக் என்பது வெள்ளம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் கள்ளச்சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மதுவிற்கு அடிமையான டாஸ்மாக்கில் மதுவை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் கள்ளச்சாராயத்தை வாங்குகிறார்கள்.  இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

நாளை மறுநாள் (21-ந்தேதி) காலை 10 மணிக்கு தமிழக பா.ஜனதா கட்சி குழுவினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறோம். அப்போது கள்ளச்சாராய விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளோம். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக அவரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முயற்சி எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை ஆளுநர் வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்து கூற உள்ளோம். தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது. உடனடியாக ஆளுநர் தலையிட்டு பேசி டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு  கூறினார்.