மேடைக்கு மேடை வீரவசனம் பேசாதீர்கள் முதல்வரே - தமிழக பாஜக கடும் விமர்சனம்!

 
annamalai mkstalin

தங்களது ஆட்சியில் அங்கன்வாடிப் பள்ளிக்கூடங்கள் பிஞ்சுக்குழந்தைகள் படிக்கும் இடமா அல்லது சமூக விரோதிகளால் மலம் கழித்து மதுப்புட்டிகளை உடைத்து போடும் இடமா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தான் பள்ளிக்கல்வித்துறைக்கு பொற்காலமா முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களே? தங்களது ஆட்சியில் அங்கன்வாடிப் பள்ளிக்கூடங்கள் பிஞ்சுக்குழந்தைகள் படிக்கும் இடமா அல்லது சமூக விரோதிகளால் மலம் கழித்து மதுப்புட்டிகளை உடைத்து போடும் இடமா? தங்களது திராவிட மாடலில் "தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட்" என்று புகழப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் மேல குன்னத்தூர் அங்கன்வாடி பள்ளிக்கூடத்திற்கும் பாதுகாப்பில்லையா? சமூக விரோதிகளின் அட்டூழியத்தை அரசு கண்டுகொள்ளாததால் எட்டு மாணவர்களை அங்கன்வாடிக்கு அனுப்பவதை நிறுத்தியுள்ளனர் பெற்றோர். இதனால் கற்றல்திறனில் ஏற்படும் தோய்வை தங்களால் ஈடுகட்ட முடியுமா?
பல மாதங்களாக சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வரும் வேளையில், அதனை கட்டுப்படுத்த இயலாத நிலையில் தான் தங்களது ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் தரம் தாழ்ந்து இருக்கிறதா? அல்லது, தமிழகத்தின் அங்கன்வாடிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து கல்வி நிலையங்களிலும் சமூக விரோதிகளை ஊடுருவ செய்து வேடிக்கை பார்ப்பதுதான் தங்கள் பொழுதுபோக்கா? தொடர்ந்து தமிழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து வருவதை கண்டும்காணாமல் இருப்பது போதாதென்று, மேடைக்கு மேடை வீரவசனம் பேசாதீர்கள் முதல்வரே என தெரிவிக்கப்பட்டுள்ளது.