சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். சபாநாயகர் அப்பாவு பொன்னாடை போர்த்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை வரவேற்றார். சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கிளம்பினார். உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். தேசிய கீதம் பாடவில்லை என கூறி அவர் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் நிறைவடைந்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நாளை காலை ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட உள்ளது. வரும் 11ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 8, 9, 10ஆம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறவுள்ளது.