தூர்தர்ஷன் தொலைக்காட்சியை வைத்து ஆளுநர் போட்ட திட்டம்.. பேரவையில் அப்பாவு பரபரப்பு பேச்சு
தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி தமிழக ஆளுநர் ரவிக்கு சட்டப்பேரவை கண்டனம் தெரிவிப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
ஆளுநர் உரை தினத்தன்று நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாகவும், அன்றைய தினம் ஆளுநர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விவரங்கள் தொடர்பாகவும் விளக்கமளித்த சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் வினாக்கள் - விடைகள், சட்டமுன்வடிவுகள், தனித்தீர்மானம், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார். அதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து ஆளுநரின் உரையை நேரலையில் வழங்குவதற்காக டிடி தொலைக்காட்சி நிலையத்திற்கு 44 லட்ச ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், நேரலை வாகனம் வி.வி.ஐ.பி நிகழ்வுக்கு சென்றுவிட்டதாக கூறி நேரலை செய்யவில்லை எனவும் அப்பாவு கூறினார்.
இது தொடர்பாக தொலைக்காட்சி நிலையத்தின் அதிகாரிகளை அழைத்து பேசும் போது நேரலை வாகனம் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டதாக கூறியதாகவும் அப்பாவு தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் காரணமாக நடப்பு ஆண்டில் அவர்களுக்கு நேரலை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அப்பாவு விளக்கமளித்தார். மேலும் ஆளுநர் அவைக்கு வருவதற்கு முன்பாக டிடி தொலைக்காட்சி மற்றும் ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தினர் முன் அனுமதி பெறாமல் அவைக்குள் வந்து கேமிராவை போட்டு படம் பிடிக்கத் தொடங்கிய நிலையில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆளுநர் அவையில் பேசுவதை வெட்டி ஒட்டி வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சி முதலமைச்சரின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆளுநரின் இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதால் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் நெருக்கடி, அவசரநிலை என்றெல்லாம் பதிவிட்டிருப்பதாகவும், தமிழக மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஆளுநருக்கு பேரவை கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் அப்பாவு விளக்கமளித்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி அமைச்சரவை எழுதிக் கொடுக்கும் தீர்மானத்தை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் ஜனநாயகக் கடமை எனவும், தேசிய கீதம் முதலில் பாடப்பட வேண்டும் என கோரிக்கை வைப்பதற்கு ஆளுநருக்கு எந்தவித உரிமையும் இல்லை எனவும் சபாநாயகர் விரிவான விளக்கத்தை அளித்தார்.