"பதில் சொல்லாமல் ஊமையாக இருந்துட்டுபோக நான் இங்கே வரவில்லை" - செந்தில் பாலாஜி

 
"பதில் சொல்லாமல் ஊமையாக இருந்துட்டுபோக நான் இங்கே வரவில்லை" - செந்தில் பாலாஜி

மின் துறையின் 2025-26ம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள புள்ளி விவரங்களை நீக்கிவிட்டு சரத்துகள், வரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. புதிய மாற்றங்கள் ஒன்றுமில்லை என திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டினார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி, “மின்வாரிய கொள்ளை தொடர்பான விளக்கக் குறிப்பில் வெறும் 5 பக்கங்களில் மட்டுமே தரவுகள் உள்ளன. மீதமுள்ளவை புள்ளி விவரமற்ற பழைய குறிப்புகள். மின் துறையின் 2025-26ம் ஆண்டின் கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ள புள்ளி விவரங்களை நீக்கிவிட்டு சரத்துகள், வரிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. புதிய மாற்றங்கள் ஒன்றுமில்லை. புள்ளிவிவரங்கள் இல்லாத கொள்கை விளக்க குறிப்புதான் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார்த்தை பேசினால், மறுவார்த்தை பேச எங்களுக்கும் தெரியும். தவறாக பேசிவிட்டு அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவீர்கள் எனக் கூறிய உடன், அமைதியாக செல்வதற்கு இந்த அவைக்கு நாங்கள் வரவில்லை. மக்கள் பிரச்சனையை பேசுவதற்காகத் தான் பேரவைக்கு வருகிறோம்.

திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் மின் துறைக்கு 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டது என நிர்மல்குமார் கூறினார். தவெக அரசில் மாற்றமே இருக்காதா? என்பதை பார்க்கலாம். அமைச்சரை மாற்றுவது முதலமைச்சரின் விருப்பம். பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  தவெக அரசில் இதுவரை மின் விநியோகம் செய்வதற்கான துறை ரீதியான கூட்டமே நடத்தவில்லை. லேசான மழைக்கு சென்னையில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதுதான் இன்றைய நிலைமை. மின் வாரியத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக கூறப்படும் நிலையில் 38 ஹார்டு டிஸ்க்குகள் கிடைத்ததாக சொல்கின்றனர். மின்வாரியத்தில் மாயமான 18 ஹார்டு டிஸ்க்குகளுக்குப் பதிலாக 38 ஹார்டு டிஸ்க்குகள் கிடைத்ததாக கூறுவது எப்படி?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.