தேர்தல் வரட்டும் பொங்கலுக்கு பணம் கொடுக்கலாம்- துரைமுருகன்
அதிமுக 2017, 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சல்லி பைசா கூட தரவில்லை என அமைச்சர் சக்கரபாணி குற்றன்க்சாட்டினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக உறுப்பினர் கோவிந்தராஜ், அதிமுக ஆட்சிக்காலத்தில் 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப்பணத்துடன் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, என பல்வேறு விதமான பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கியதாகவும், தற்போது ஆயிரம் ரூபாய் கூட வழங்கவில்லை என பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 2009 ஆம் ஆண்டு முதன்முதலாக கருணாநிதி தான் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்ததாகவும், 2011 முதல் 2021 வரை ஆட்சியிலிருந்த அதிமுக 2017, 2018 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சல்லி பைசா கூட தரவில்லை என பேசினார். மேலும் கொரானா கால கட்டத்தில் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் கூறிய நிலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிமுக கொடுத்தது எனவும் அவர் பேசினார். ஆட்சிக்கு வந்தவுடன் மீதமிருந்த 4 ஆயிரம் ரூபாய் தொகையை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி வழங்கியதாகவும் சக்கரபாணி பேசினார். இதற்கிடையில் பேசிய அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், அதிமுக தேர்தல் காலம் என்பதால் 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தீர்கள், எங்களுக்கு தேர்தல் வரவில்லை எனவும் தேர்தல் வந்தால் பணம் தருவது குறித்து பார்க்கலாம் என பேசியது சக உறுப்பினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.