"விஜய் கரூர் செல்வதில், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.."- டி.கே.எஸ்.இளங்கோவன்
விடியல் பயண திட்டத்தின் பெயர் மாற்றம் செய்து இருப்பதற்கு திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “ஜனநாயக நாட்டில் ஒருவர் மற்றொரு இடத்திற்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது... முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல விரும்பினால், அங்கு சென்று மக்களை சந்திக்கலாம். யாரால் அவரை தடுக்க முடியும்? முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதில், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை... 41 பேரின் மரணத்திற்கு தி.மு.க தான் காரணம் என ஒரு மூத்த கட்சி உறுப்பினரின் பேச்சு குறித்து மட்டுமே நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். எங்கள் மனுவில், முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதை தடுக்குமாறு கேட்கும் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. கரூர் விவகாரத்தில் தங்கள் மீதான தவறை மறைக்க த.வெ.க அரசு பொய் சொல்லி வருகிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பெயரை மாற்றுவதை மட்டுமே தவெக அரசு மேற்கொண்டுவருகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே தவெக அரசு நிறைவேற்றவில்லை. த.வெ.க. ஆட்சி என்பது பெயர் மாற்றத்திற்கான ஆட்சியாக மட்டுமே உள்ளது” என்றார்.

