அமைச்சர் பதவியை எதிர்பார்த்தே அண்ணாமலை சாட்டையால் அடித்துக்கொண்டார்- டி.கே.எஸ். இளங்கோவன்
அமைச்சர் பதவியை எதிர்பார்த்தே அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையில் அடித்துக் கொண்டுள்ளார் என தி.மு.க செய்தி தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்று வரும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க செய்தி தொடர்புத்துறை தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், “அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் வேண்டுமென்றே திமுக மீது களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். குற்றவாளியை கைது செய்த பின்பு வேறு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் என்பது புரியவில்லை. குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் பல ஆண்டுகளாகவே அந்த பகுதியில் ஒற்றைத் திறந்து உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அண்ணாமலைக்கு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக சாட்டையடி போராட்டம் நடத்தவில்லை. மாறாக எல்.முருகன் வேலை தூக்கி நடந்த பின்பு தான் அவருக்கு இணை அமைச்சர் பதவி கிடைத்தது. அதே போல தனக்கும் அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் அண்ணாமலை தன்னை சாட்டையால் அடித்து கொண்டுள்ளார். கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட பொழுது அங்கு காவல் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. கெளரி லங்கேஷ் கொலை குற்றவாளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். கெளரி லங்கேஷை கொலை செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அண்ணாமலை விளக்கமளிக்க வேண்டும்” என்றார்.