செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா?- டிகேஎஸ் இளங்கோவன்
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என்றும் செந்தில் பாலாஜிக்கு கிடைத்துள்ள நீதி காலதாமதமானது என திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், “குற்றம் சாட்டப்பட்டவராகவே 15 மாத காலம் செந்தில் பாலாஜி சிறையில் இருந்துள்ளார். 15 மாத காலம் சிறையில் இருந்தது உரிமை மீறிய செயலாக தான் நாங்கள் கருதுகிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் நிரூபணம் செய்யப்படும் வரை அவர்கள் குற்றவாளிகள் என கருதப்பட மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவராகவே செந்தில் பாலாஜி 15 மாதம் சிறையில் வைக்கப்பட்டிருப்பது தனது துறைகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைகிறது.
பாஜக என்பது ஓர் வாஷிங் மெசின் என்று சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்து விட்டால் தூய்மையாக மாறி விடுவார்கள். இல்லை என்றால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகிவிடுவார்கள். செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதி காலதாமதமாக வழங்கியதாக தான் நான் கருதுகிறேன். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்கு உரிய ஒன்று, நியாமான ஒன்று. பாஜகவினர் மீது குற்றம் சுமத்தபட்டால் அவர்கள் மீது எந்த வழக்கும் வராது. செந்தில் பாலாஜி அமைச்சராக தடை இல்லை என சொல்லப்பட்டு உள்ளது, அமைச்சராக ஆவது குறித்து திமுக தலைவர் தான் முடிவெடுப்பார்” என்றார்.