திருவண்ணாமலை தீபத் திருவிழா- மலை மீது ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா 17-ஆம் தேதி அதிகாலை (நாளை) கொடியேற்றத்துடன் தொடங்கி காலை மற்றும் இரவு நேரங்களில் மாட வீதிகளில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதியுலா நடைபெறும்.
வருகின்ற 26 ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் அண்ணாமலையார் கருவறையின் முன்பாக அதிகாலை 4 மணி அளவில் பரணி தீபமும் மாலை 6:00 மணிக்கு முக்கிய நிகழ்வாக கருதப்படும் மகாதீபம் அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வை காண உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்கள்,வெளிநாடுகளில் இருந்து சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் பேருந்து வசதிகள்,குடிநீர் வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வருகின்ற பக்தர்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும்,பக்தர்களின் வசதிக்காக வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும், பாதுகாப்புக்காக 14 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், மேலும் 85 இடங்களில் மருத்துவ முகாம் அனுப்பப்பட உள்ளதாகவும், 9 தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்களை அழைத்து வர 150 சிறப்பு பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என்றும், கார்த்திகை தீபம் நடைபெறும் 10 நாட்களும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்றும், திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதை உள்ளிட்ட 226 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ,தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிகாலை பரணி தீப நிகழ்வுக்கு 4000 பக்தர்களும், மாலை நடைபெற உள்ள மகா தீப நிகழ்விற்கு 7000 முதல் 7500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், குறிப்பாக மகா தீபத்தன்று அண்ணாமலையார் மலையின் மீது ஏற முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2500 நபர்கள் மட்டுமன் மலையின் மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அனுமதி இல்லாமல் பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி இல்லை என்றும் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக தேவைப்படும் இடங்களில் காவல்துறையினரை அதிக அளவு குவிக்காமல் தேவையான அளவு காவல் துறையினறை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அதேபோன்று கோவிலுக்கு உள்ளே உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரை அனுமதிக்காமல் பொதுமக்களை அதிகளவு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருக்கோவிலின் உள்ளே இதய நோய் மருத்துவப் பிரிவு அடங்கிய மருத்துவ குழுக்களை ஏற்படுத்த வேண்டும் எனவும்,மலையின் மீது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், மலை மீது கற்பூரம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.