திருத்தணி கோயில் சிசிடிவியை மறைத்த விவகாரம் - 2 அர்ச்சகர்கள் பணியிட மாற்றம்!

 
திருத்தணி சிசிடிவி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருத்தணியில் அமைந்துள்ளது. ஐந்தாம்படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இருப்பினும் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் விஐபிகளிடம் பணம் வாங்கி நேரடியாக சன்னிதானத்திற்குள் அழைத்துச் செல்வதாக நீண்ட நாட்களாகவே புகார் எழுந்து வந்தது.திருத்தணி சிசிடிவி

அந்தப் புகாரை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் வெளியான ஒரு வீடியோ அமைந்தது. இரு வாரங்களுக்கு முன்பு மூலவர் சன்னிதானத்தில் இருக்கும் சிசிடிவி கேமராவை அர்ச்சகர்கள் 2 பேர் துணியை கொண்டு மறைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ஏன் கேமராவை மறைத்தார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் விஐபிகள் தரிசனத்திற்காகவே சிசிடிவியை மறைத்ததாகவும், இது நீண்ட நாட்களாகவே நடைபெறுவதாகவும் ஒருசிலர் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.


இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் என வைரலாக விவகாரம் பூதாகரமானது. ஆனால் அர்ச்சகர்கள் தரப்பில், ஆகம விதிகளின்படி பிரஸ்தார பூஜையின்போது மூலவர் சன்னிதானத்தை மறைக்க சிசிடிவி கேமராக்களை மறைப்பது வழக்கம் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று திடீரென்று அந்த 2 அர்ச்சகர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இதனை அமைச்சர் சேகர்பாபு உறுதிப்படுத்தியுள்ளார்.  விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டால், பாரபட்சமின்றி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.