திருத்தணி மார்க்கெட்டுக்கு மீண்டும் காமராஜர் பெயர்!

 
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் : தமிழக அரசு சார்பில் மரியாதை..

திருத்தணி ம. பொ. சி. சாலையில் ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் இயங்கி வந்த தினசரி மார்க்கெட் பழுதடைந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தால் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு தினசரி அங்காடி என்று பெயர் சூட்ட திட்டமிடப்பட்டிருந்தது.  இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,  திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரையே சூட்ட திமுக அரசு முடிவு செய்துள்ளது.  

இது தொடர்பாக திருத்தணி நகராட்சி நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம். திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும், சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும், பழைய கட்டிடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப் பட்டுள்ள நாளங்காடிக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.