திருப்பூர்: விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்.. ஒருவர் படுகாயம்..

 
Thirupur


திருப்பூரில் விநாயகர் சிலைகளை கரைக்க ஊர்வலம் செல்லும்போது, ஒரு பிரிவினைடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் கடந்த 7 ஆம் தேதி முதல்  மாநகரின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. நான்காம் நாளான நேற்று(செப்.10) திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகளை  சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஊர்வலமாக  எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில்  திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி எம்.எஸ் நகர் வழியே ஆலங்காடு பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றது. 


 எம்.எஸ் நகர் அருகே ஊர்வலம் சென்றபோது, யாருடைய சிலை முதலில் செல்ல வேண்டும் என்பதில்  இரு பகுதி வாலிபர்களிடையே  திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறில் தொடங்கிய மோதல் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.  இரு தரப்பினரும் கையில் கிடைத்த பிளாஸ்டிக் பைப் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.  தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமரசம் செய்தும் இளைஞர்கள் மோதலை கைவிடாததால் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். 

மது போதையில் இந்த தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் போயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட  வடக்கு போலீசார், இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இளைஞர்கள் மோதிக்கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.