பல்லடம் கொலை சம்பவம் - தூக்கத்தில் இருந்து இந்த அரசு விழித்துக் கொள்ள வேண்டும்!!

டாஸ்மாக் கடைகளை மூடாமல் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் போதை ஆசாமிகளால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
குடியிருப்பு பகுதியில் மது அருந்தியதை தட்டி கேட்டதால் மர்மநபர்கள், 4 பேரை கொடூரமாக கொலை செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருப்பதே காரணம்.டாஸ்மாக் கடைகளை மூடாமல் குற்றங்கள் பெருகுவதற்கு காரணமாக இருக்கும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும், மக்களை பாதுகாக்கவும் தமிழக அரசு தவறிவிட்டது.
தூக்கத்தில் இருந்து இந்த அரசு விழித்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்க வேண்டும். இதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். 4 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய நிதி உதவி வழங்க வேண்டும்."என்று குறிப்பிட்டுள்ளார்.