திருப்பூர் : அதிமுக எம்.எல்.ஏ தோட்டத்தில் எஸ்.ஐ வெட்டிக்கொலை.. 5 தனிப்படைகள் அமைப்பு..!!

 
Tiruppur SI Murder

திருப்பூர் அருகே அதிமுக எம்.எல்.ஏ தோட்டத்தில் எஸ்.ஐ வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம்  பகுதியில் உள்ள மூங்கில்  தொழுவு அமைந்துள்ளது.  இந்த தோட்டத்தில் தந்தையும் மகனுமான  மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று (ஆக5) இரவு மதுபோதையில் தந்தை, மகன் இருவரும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது தந்தை மூர்த்தியை , மகன் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.  இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினம் காவல்துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  

murder

அந்ததகவலின் பேரில்  அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த குடிமங்கலம் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல், நிகழ்விடத்திற்கு விசாரணைக்காக சென்றுள்ளார்.  அப்போது இருவருக்கும் இடையேயான மோதலை தடுத்து காயமடைந்த மூர்த்தியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த  தங்கபாண்டியன் அறிவாளை எடுத்து உதவி ஆய்வாளர் சண்முகவேலை வெட்டியுள்ளார். உடனிருந்த ஓட்டுநரையும் வெட்டுவதற்காக துரத்திய நிலையில், தங்க பாண்டியனிடமிருந்து தப்பொயோடிய அவர் காவல்நிலையத்திற்கு சென்று தகவல் அளித்துள்ளார்.  

அதிர்ச்சியடைந்த குடிமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், எஸ்.ஐ., சண்முகவேல் உயிரிழந்துவிட்டார். அவரது உடலை மீட்ட போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய தங்கபாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.