திருப்பதி லட்டு சர்ச்சை: சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்..!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்ததாகவும், இதனால் லட்டு தரம் மிகவும் குறைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு , திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். பின்னர் குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவராகம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டின் மீதான புனிதத்தன்மை குறித்து மக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்பியது.
இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்புக்கான நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் பேசியது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. திருப்பதி லட்டு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ஆந்திர முதல்வர், அதன் முடிவுகள் வருவதற்கு முன்பே பொதுவெளியில் பேசியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர். சந்திர பாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும், அரசியல் அமைப்பு சட்டப்படியான பதவியில் உள்ள முதலமைச்சர் கடவுளை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றும் நீதிபதி கவாய் அறிவுறுத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய நெய்தான் திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என நீதிபதி விஸ்வநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். திருப்பதி லட்டில் பயன்படுத்தப்பட்டது கலப்பட நெய் என்பதற்கு ஆதாரம் எங்கே? திருப்பதி கோயிலுக்கு எத்தனை ஒப்பந்ததாரர்கள் நெய் விற்பனை செய்தனர்? ஒப்புதல் அளிக்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததா? என்றும் உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது. கலப்படம் செய்யப்பட்டதாக கூறப்படும் நெய், திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை என்றும் வினவியுள்ளது.