திருப்பதி லட்டில் குட்கா..!! மீண்டும் மீண்டுமா?? வைரலாகும் வீடியோ..
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையே முடிவுக்கு வராத நிலையில், அதற்குள்ளாக லட்டில் குட்கா கலந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார்.
இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதற்கு பரிகாரமாக, அர்ச்சகர்கள் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தினர். காலை 6 மணி முதல் 9 மணி வரை தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு பிரசாதம், லட்டு தயாரிக்கும் மடப்பள்ளி, லட்டு விநியோகம் செய்யும் கவுன்ட்டர்கள், 4 மாட வீதிகளில் அர்ச்சகர்கள் தெளித்தனர்.
இந்த நிலையில் திருப்பதி லட்டில் குட்கா பொட்டலம் கிடைத்ததாக தெலங்கானாவைச் சேர்ந்த பெண் பக்தை ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். பத்மா என்னும் அவர், “கடந்த 20ம் தேதி திருப்பதியில் நாங்கள் தரிசனம் செய்தோம். மறுநாள் காலை வீட்டிற்கு வந்தோம். குளித்துவிட்டு எனது மகனுக்கு பிரசாத லட்டு கொடுத்தேன். பிரசாத லட்டுக்குள் புகையிலை பாக்கெட் இருந்தது. இந்த பாக்கெட்டை என் மகனிடம் காண்பித்தேன். புகையிலை துர்நாற்றம் வீசுவதாக கூறினான். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.
அதேபோல் அவரது மகன் கூறியதாவது, “என்னுடைய தாயார் ஒவ்வொரு மாதமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்வார். கடந்த 19ஆம் தேதி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது, உறவினர்களுக்கு வழங்குவதற்காக லட்டை உடைத்து பார்த்தேன். அப்போது அடில் குட்கா பாக்கெட் இருந்தது தெரியவந்தது” என்றார். பிரசாத லட்டில் குட்கா பாக்கெட் இருந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் வந்தது எப்படி வந்தது என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.