“இளைஞர்களின் வாக்குகள் சிதறும் என கூறுவது கற்பனை”- திருச்சி சிவா
இந்த தேர்தலில் இளைஞர்களின் வாக்கு சிதறும் என கூறுவது கற்பனை என வாக்களித்த பின் திருச்சி சிவா பேட்டியளித்தார்.
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட வெஸ்ட்ரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் ஆனால் மக்கள் நிச்சயமாக எங்களுக்கு வெற்றியை தருவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.இளைஞர்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை. திமுகவிற்கு வரும் வாக்குகள் எங்களிடம் கட்டுக்கோப்பாக உள்ளது இது தவிர ஐந்தாண்டு கால திமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், எங்களுடைய பிரச்சாரம் முதலமைச்சரின் மீதான நம்பிக்கை மக்களிடம் அதிகரித்துள்ளது. அதனால் நாங்கள் தான் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது” என்றார்.

