தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு நேரக்கட்டுப்பாடு ..!

 
1

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெயிலால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களைக் காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஓர் அங்கமாக மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்ககம் தெரிவித்துள்ளது.

வெயிலில் தொழிலாளர் உடல்நலன் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

“சுட்டெரிக்கும் வெயிலால் கட்டுமான தொழிலாளர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். எனவே, இதைக் கருத்தில் கொண்டு மே மாதம் இறுதி வரை திறந்தவெளி கட்டுமான பணி நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

“இனி, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை எந்த வகையான திறந்தவெளி கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது,” என்ற தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குநர் தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, சென்னையிலும் மதுரையிலும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் புதிய உத்தரவை அனைத்து கட்டுமான நிறுவனங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் மேலும் கூறியுள்ளது.

வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வேலையை மதிய நேரத்திற்கு பதிலாக இரவு நேரங்களில் பார்க்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கட்டுமானத் தொழிலாளர்கள் வெயிலின் தாக்கத்தால் தவிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில், நேரக்கட்டுப்பாடு உத்தரவு வெளியாகி உள்ளது.