தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னல் எச்சரிக்கை! உஷாராக இருக்க வேண்டிய மாவட்டங்கள் எவை?
தமிழகத்தில் இடி மற்றும் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது என தெரிய வந்துள்ளது.
7 மாவட்டங்கள்
இதன்படி ராணிப்பேட்டை, ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர், திருவள்ளூர், சேலம் மற்றும் கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
சில மணி நேரங்களில் மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது என்று குறிப்பிடப்பட்ட சூழலில், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
• இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் திறந்த வெளியில் அல்லது மரங்களின் அடியில் நிற்க வேண்டாம். அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
• பாதுகாப்பான கான்கிரீட் கட்டிடங்களுக்குள் தஞ்சம் அடையுங்கள்.
• தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், மின் இணைப்புகளை துண்டித்து வைக்கவும்.
காரணங்கள்
பொதுவாக வட மாநிலங்களில் இதுபோன்று மழை காலங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் தொடர்பாக முன்னெச்சரிக்கை தகவல் வெளியிடப்படும். எனினும், பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னல் தாக்கி பலர் பலியாகி உள்ளனர். கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இந்த சூழலில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. சூப்பர் எல் நினோ, எல் நினோ போன்ற காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, அது உலக அளவில் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. அது தமிழகத்திலும் எல் நினோ பாதிப்பை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

