நீரில் மூழ்கி மூவர் பலி- கோடை விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் விபரீதம்

 
நீரில் மூழ்கி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜைக்காக வருகை தந்த மூன்று பேர் ஊரணி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை அருகே நீரில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் பலி - Varalaruu.com -  24/7 Live News

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு அட்சையா(15), தனலட்சுமி (12), பூமிகா (10) என மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்களது குலதெய்வமான மயிலியாத்தம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி தெற்குபட்டியில் உள்ளது. இந்நிலையில் இவர்களது குலதெய்வ கோயில் கிடா வெட்டு பூஜையை முன்னிட்டு விஜயகாந்த் அவரது மனைவி விஜயா, விஜயகாந்தின் சகோதரரான ஊட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (29), விஜயகாந்தின் மூன்று மகள்கள் என மொத்தம் ஆறு பேர் பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டிக்கு காரில் வந்துள்ளனர். 

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊரணியில் சகோதரிகளான சிறுமிகள் அட்சையா (15), தனலட்சுமி (12) ஆகிய இருவர்  குளித்த நிலையில், தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் பார்த்த சிறுமிகளின் சித்தப்பாவான ஊட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார்(29) அவர்களை மீட்க முயன்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து நீரில் மூழ்கிய இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு இளைஞர் உள்ளிட்ட மூன்று பேரையும் சடலங்கலாக மீட்ட கிராமத்தினர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மருத்துவர்கள் அவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலும் சிறுமிகள் மற்றும் சிறுமிகளின் சித்தப்பா ஆகிய மூன்று பேரின் சடலங்களை கண்டு சிறுமிகளின் பெற்றோர் மற்றும் 10 வயது சகோதரி ஆகியோர் கதறி அழுதனர். 

இதனை அடுத்து உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் உடல் கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.