செருப்பு அணிந்து சிமெண்ட் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் புரியாது - தங்கர் பச்சான்..!!

 
1

மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமியை ஆதரித்து தங்கர்பச்சான், பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கடலங்குடி கடைவீதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், "மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் சினிமாவை காட்டிலும் மக்களின் முன்னேற்றத்திற்காக போராடுவதையே நான் விரும்புகிறேன். கடந்த தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள் விவசாயிகளின் நலனை முற்றிலும் மறந்துவிட்டனர்.

செருப்பு அணிந்து கொண்டு சிமெண்ட் சாலையில் நடந்து செல்பவர்களுக்கு விவசாயிகளின் கஷ்டம் ஒருபோதும் புரியாது; மண்ணோடு மண்ணாகப் போராடும் விவசாயிகளின் வழியை உணர்ந்தவர்கள் மட்டுமே அவர்களுக்கு சரியான தீர்வை தர முடியும். இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கி தராமல் வெறும் உதவித்தொகை வழங்கி ஏமாற்றும் போக்கை நிறுத்த வேண்டும்.

மயிலாடுதுறை மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெறுவதற்கு பாமக பெரும் பங்காற்றியது" என்று குறிப்பிட்டார்.

பின்னர் காளி கடைவீதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தங்கர்பச்சான், "காளி கிராமம் இருண்டு கிடக்கிறது; மின்சாரம் மின்கம்பியில் மட்டும் தான் இருக்கிறது. வீடுகளில் இல்லை. மன்னர் ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் குறைகளைத் தெரிந்துகொள்ள மாறுவேடம் அணிந்து மன்னர்கள் நகர்வலம் வருவார்கள்.

ஆனால் திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்திக்கவில்லை. அவர் வந்து நேரடியாக பார்த்தால்தான் மக்களின் நிலை தெரியும். மயிலாடுதுறையில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். புத்திசாலித்தனமாக வேட்பாளரைதேர்ந்தெடுக்காமல் இந்த மண்ணுக்கு சம்பந்தமில்லாத ஆட்களை பொதுமக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதனால்தான் வெளியூரிலிருந்து வேட்பாளர்களைக் கொண்டு வந்து காங்கிரஸ் நிறுத்துகிறது. காங்கிரஸ் கட்சிக்கு பணம் மட்டும்தான் வேண்டும். யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக கொண்டு வந்து நிறுத்தி வெற்றிப் பெற்றுள்ளனர். இது மக்களுடைய தவறு. இந்த முறை காங்கிரஸை தோற்கடித்து பாருங்கள்; அடுத்த முறை வெளியூரிலிருந்து வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள்.

மக்கள் இதுவரை புத்திசாலித்தனமாக தங்கள் வாக்கை பயன்படுத்தவில்லை. இந்த முறை அப்படி இருக்கக் கூடாது" என தங்கர் பச்சான் பேசினார்.