வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இனி ஈஸியாக பெயர் சேர்க்கலாம்..!

 
1 1

ஒரு வேளை உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் கூட கவலையில்லை. உங்களது பெயரை சேர்க்க தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் கொடுத்துள்ளது. அதில் உங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.

 

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய கீழ்க்கண்ட இணையதளங்களை அணுகுங்கள்.

https://elections.tn.gov.in/SIR_2026.aspx 

https://voters.eci.gov.in/download-eroll 

https://electoralsearch.eci.gov.in

 

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் மீண்டும் தங்களது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஜனவரி 18ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் உள்ளது. இதற்கான உரிய விண்ணப்பத்துடன், தேர்தல் ஆணையம் அறிவிததுள்ள கீழ்க்கண்ட ஆவணங்களில் ஒன்றை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களின் பட்டியல்:

1. மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்களின் (PSU) நிரந்தரப் பணியாளர் அல்லது ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை/ஓய்வூதியக் கொடுப்பணை ஆணை (PPO).

2. 01.07.1987-க்கு முன்னதாக இந்தியாவில் உள்ள அரசு/உள்ளாட்சி அமைப்புகள்/வங்கிகள்/அஞ்சல் நிலையம்/எல்.ஐ.சி (LIC)/பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை/சான்றிதழ்/ஆவணம்.

3. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்.

4. கடவுச்சீட்டு (Passport).

5. அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள்/பல்கலைக்கழகங்களால் வழங்கப்பட்ட மெட்ரிகுலேஷன் அல்லது கல்விச் சான்றிதழ்.

6. தகுதிவாய்ந்த மாநில அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்.

7. வன உரிமைச் சான்றிதழ்.

8. தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட OBC/SC/ST அல்லது ஏதேனும் ஒரு சாதிச் சான்றிதழ்.

9. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) (எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ அங்கெல்லாம்).

10. மாநில/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு (Family Register).

11. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு நிலம்/வீடு ஒதுக்கீடு சான்றிதழ்.

12. ஆதார் அட்டை தொடர்பான விபரங்களுக்கு, ஆணையத்தின் 09.09.2025 தேதியிட்ட கடித எண். 23/2025-ERS/Vol.II-இல் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் பொருந்தும்.

13. 01.07.2025-ஆம் தேதியைக் குறிப்பீடாகக் கொண்ட பீகார் மாநில வாக்காளர் பட்டியலின் நகல் (Extract).

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாம் வருகிற 27,28-ம் தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3,4 (சனி, ஞாயிறு)ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.