தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள் - காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விளாசிய தயாநிதி மாறன்..!!

 
Q

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற எஸ்எஸ்ஏ திட்டத்தின் மூலம் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களுக்கான பயிற்சி முகாமில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். பின்னர், கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதுடன், கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசியிருந்தார். கர்நாடகா- தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே நிலவும் காவிரி விவகாரங்கள் குறித்து அவர் எதுவும் பேசாமல் சென்றது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில், 'நம்பிக்கையை விற்று பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்' என்று காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், 'தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், "நம்பிக்கையை விற்று, பதவியை வாங்கும் நச்சுப்பாம்புகள்! தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு காவிரி உரிமைகள் குறித்து பேசாமல் இருப்பவர்கள் துரோகிகள்! காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காவு வாங்கும் மேகதாது அணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதவர்கள் துரோகிகள்! நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தாமல், தேர்வில் முறைகேடு நடப்பதாக மட்டும் பேசுகிறவர்கள் துரோகிகள்!

பாஜகவின் குதிரைப் பேரங்களைக் கண்டிக்கிறவர்கள், தவெகவின் அருவருப்பான குதிரைப் பேரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் துரோகத்தின் தொடர்ச்சியே! ஆட்சியையும், அமைச்சர்களையும் விமர்சித்து எக்ஸில் பதிவிட்டால்கூட கைது செய்யும் பாசிச தவெக ஆட்சியைக் கண்டிக்காததும் துரோகமே! டெல்லி போலீசுக்குச் சற்றும் குறைவில்லாமல், தமிழ்நாடு போலீசும் நீட் எதிர்ப்புப் போராட்ட மாணவர்கள் மீது அராஜகத் தாக்குதலை நடத்தியதைக் கண்டிக்காததும் துரோகத்தின் உச்சமே!

தமிழ்நாட்டுக்கு வந்து ஒருவர் அரசியல் பாடம் எடுத்ததைப் படித்தபோது, இதெல்லாம் வரிசையாக நினைவுக்கு வந்தது! அப்பப்பா… எவ்வளவு துரோகங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.