உங்கள் பகுதியில் தீபாவளிக்கு வரப்போகும் அந்த 30,000 சிறப்புப் பைகள்! சென்னை மாநகராட்சியின் மாஸ் பிளான்!

 
Q

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தீபாவளிப் பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் உருவாகும் பட்டாசுக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் வகையில், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து அகற்றுவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழிப்புணர்வு ஒலிப்பதிவு

பட்டாசுக் கழிவுகளைக் கையாளுதல் மற்றும் அவற்றைத் தனியாகச் சேகரிப்பதன் அவசியம் குறித்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாநகராட்சியின் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மூலம் பட்டாசுக் கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வு ஒலிப்பதிவுகளும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உருவாகும் பட்டாசுக் கழிவுகளை இதர வீட்டுக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து வைத்து, தங்களது பகுதிகளுக்கு வரும் பெருநகர சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் அவற்றை தனியாக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பெருமளவில் திடக்கழிவுகளை உருவாக்கும் குடியிருப்பு வளாகங்களின் (Bulk Waste Generator – BWG) நிர்வாகிகள், தங்களது குடியிருப்பு வளாகங்களில் உருவாகும் பட்டாசுக் கழிவுகள் அனைத்தையும் இதரக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாக ஓரிடத்தில் சேகரித்து வைத்து, மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

600 பணியாளர்கள்

பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தலா 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30,000 எண்ணிக்கையிலான பைகள் (Specialized Bags) தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பட்டாசுக் கழிவுகளை இப்பைகளில் தனியாகச் சேகரிப்பார்கள். இதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 600 பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சுத்தம் செய்யும் பணிகள்

இவ்வாறு தனியாகச் சேகரிக்கப்படும் பட்டாசுக் கழிவுகள் மாநகராட்சியால் உரிய முறையில் எடுத்துச் செல்லப்பட்டு, பாதுகாப்பான முறையில் அகற்றப்படும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தீபாவளிப் பண்டிகை நாட்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களில் இயந்திரங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளைப் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

செய்ய வேண்டியவை:

· பொதுமக்கள் குறைந்த அளவு மாசு மற்றும் குறைந்த ஒலி எழுப்பக்கூடிய பசுமைப் பட்டாசுகளை (Green Crackers) மட்டுமே வெடிக்க வேண்டும்.

· பொதுமக்கள் தமிழக அரசு அனுமதித்துள்ள நேரங்கள் ஆன காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்

· பட்டாசுக் கழிவுகளை இதர வீட்டுக் கழிவுகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து, மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

· பட்டாசுகளை வெடிக்கும்போது ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், பெரிய அளவிலான விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், பொதுமக்கள் உடனடியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்க வேண்டும்

செய்யக்கூடாதவை:

· அதிக ஒலி எழுப்பக்கூடிய தொடர் பட்டாசுகளை (Series Crackers) வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· குடிசைப் பகுதிகள் மற்றும் தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ள இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· பட்டாசுகள் மற்றும் பட்டாசுக் கழிவுகளை ஒன்றாகக் குவித்து வைத்து தீ மூட்டுவதையும், மின்மாற்றிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிப்பதையும், குப்பைத் தொட்டிகளுக்குள் எரியும் பட்டாசுகளைப் போடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையின்போது பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்குமாறும், பட்டாசு வெடிப்பதால் உருவாகும் கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பட்டாசுக் கழிவுகளைச் சாலைகள், தெருக்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதைத் தவிர்த்து, தங்களது பகுதிகளுக்கு வரும் மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையைத் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க பொதுமக்கள் அனைவரும் மாநகராட்சியின் இச்சிறப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.