விளாத்திகுளம் வழக்கில் ஒருவரை கைது செய்தது எப்படி? - மாவட்ட எஸ்.பி. மதன் விளக்கம்
விளாத்திகுளத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணையின் அடிப்படையில்தான் தர்ம முனீஸ்வரன் கைது நடந்தது என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன், “வழக்கு தொடர்பாக இரவும், பகலுமாக அதிகாரிகள் உழைத்துள்ளனர். செல்போன் டவரை வைத்து 2700 செல்போன் நம்பர்களை தனிப்படையின் ஒரு பிரிவு ஆய்வு செய்தது. வேடநத்தம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றப்பின்னணி உடைய 800 ஆண்கள் விசாரிக்கப்பட்டனர். 461 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் நேரடியாகவும், டிஜிட்டல் முறைபடியும் விசாரணை நடைபெற்றது.
சம்பவ இடத்தில் சிசிடிவி இல்லை என்பதால் சுற்றியுள்ள 98 சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன. கிராம மக்களுக்கு கொலையில் தொடர்பில்லை என உறுதியாக கூறினர். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நீதிமன்றம் வழக்கை நேரடியாக பார்வையிட்டு வருகிறது. விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுதரப்படும். வழக்கு குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவோம், பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரையோ, புகைப்படத்தையோ சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் வெளியிடுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் புகைப்படத்தை சட்டப்படி பயன்படுத்த கூடாது, மீறி பயன்படுத்தினால் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்” என்றார்.

