தூத்துக்குடி எம்.பி கனிமொழி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு..!!
தற்போது பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது திமுக எம்பியான கனிமொழி தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குள் நுழைய ஆர்வமாக இருக்கிறாராம். இதற்கு முன்னோட்டமாக தான் கனிமொழி எம்பியின் ஆதரவாளர்கள் திமுகவில் அவரது பெயரில் விருப்ப மனுக்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி கனிமொழி தனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே தேசிய அரசியலில் தான் முன்னிறுத்தப்படுகிறார். இதனால் அவர் மாநில அரசியலுக்கு திரும்ப நினைக்கிறார். அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட அவர் ஆர்வமாக உள்ளார்.
அதன்படி 4 மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் டெல்டா மண்டலத்தை சேர்ந்த திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ளன. இதில் திருவாரூர் என்பது மறைந்த முன்னாள் முதல்வரும், கனிமொழியின் தந்தையுமான கருணாநிதியின் சொந்த ஊராகும். அதேபோல் திருவாரூர் சட்டசபை தொகுதியில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் கருணாநிதி போட்டியிட்டு எம்எல்ஏவாகி இருந்தார்.
அதேபோல் 1997 ல் திருவாரூர் தனி மாவட்டமாக பிரிவதற்கு முன்பு அது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக தான் இருந்தது. மேலும் டெல்டா என்பது திமுகவின் கோட்டையாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்று கனிமொழி நினைப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றில் அவர் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது கனிமொழி எம்பி திமுகவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தென்மண்டல பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இவரது கட்டுப்பாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களில் உள்ள உட்கட்சி பிரச்சனைகளை தீர்த்து அனைவரையும் ஒருங்கிணைத்து வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது தான் கனிமொழியின் பணியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட முயன்று வருவதாக கூறப்படுகிறது.

